ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி செவ்வாய்க்கிழமை (நேற்று) வெளியிட்ட அறிவிப்பில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் கருத்தில் கொண்டும், வருவாய் நீரோட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பள ஒத்திவைப்பு ஊழியர்களுக்கு 10 முதல் 100 விழுக்காடு வரை இருக்கும் எனவும் அவர் கூறினார்.
அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், மாநில மேல்சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.), சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு 100 விழுக்காடு சம்பள ஒத்திவைப்பு அமல்படுத்தப்படும்.
அகில இந்திய சேவை அலுவலர்களுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) 60 விழுக்காடும், மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் 50 விழுக்காடும், நான்காம் நிலை ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காடு சம்பளம் ஒத்திவைக்கப்படும்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆந்திராவில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க 1600க்கும் மேற்பட்டோரும், உலகம் முழுக்க 8 லட்சத்துக்கு மேற்பட்டோரும் இந்த ஒட்டுண்ணி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.