கரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திவரும் நிலையில், அச்சு ஊடக உரிமையாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று உரையாற்றினார். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களின் போராட்ட குணத்தை ஊக்கப்படுத்துவது முக்கியமாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வதந்திகள், எதிர்மறை கருத்துகள், நம்பிக்கையின்மை போன்றவற்றை மக்களிடையே பரவாமல் தடுப்பது அவசியம். நாட்டின் அனைத்து மூலைக்கும் முக்கியமான தகவல்களைச் சென்றடைய செய்வதற்கு ஊடகத்தினரைப் பாராட்டுகிறேன். நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடுவதில் செய்தித்தாள்கள் முக்கிய பங்காற்றுகிறது. கரோனா குறித்த விழிப்புணர்வு செய்திகளை கட்டுரைகளாக செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
அத்தியாவசிய பொருள்கள் எங்கு கிடைக்கும், கண்டறிதல் மையங்கள் எங்கிருக்கிறது, யார் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும், தனிமைப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் போன்ற தகவல்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அரசு, மக்கள் ஆகியோருக்கிடையே பத்திரிகையாளர்கள் பாலமாக இருக்க வேண்டும்" என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மோடியுடனான இச்சந்திப்பில் தென்னிந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ள அச்சு ஊடகமான ஈநாடு குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் உள்ளிட்ட நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களும், அச்சு ஊடக உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோவிட் 19: தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவமும் அவசியமும்!