சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கரோனா வைரஸ் தொற்று அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவியது. அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் சீனா சென்று வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவும் சீன பயணிகளுக்கு இ-விசா வழங்கும் சேவையை ரத்து செய்திருந்தது.
இந்நிலையில் சீனர்களுக்கும், கடந்த இரு வாரங்களில் சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டவருக்கும் வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சீனர்களுக்கும், சமீபத்தில் சீனா சென்று வந்த வெளிநாட்டவருக்கும் வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் புதிய விசா வேண்டி பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய இடங்களிலுள்ள இந்திய தூதரங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 15ஆம் தேதிக்கு பின் சீனாவிலிருந்தவர்கள், ஏற்கனவே இந்தியா வந்திருந்தால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக எண் +91-11-23978046 அல்லது மின்னஞ்சல் முகவரியான ncov2019@gmail.com-ஐ தொடர்பு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நாட்டைவிட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப்படுவீர்கள்' - போஸ்டரால் கிளம்பும் புதிய சர்ச்சை