கோவிட்-19 பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும்; பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'Chikitsa Setu' என்ற செயலியை உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
இந்தச் செயலியை வெளியிட்டுப் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "இந்தச் செயலி மூலம் கரோனா குறித்து மக்களிடையே எளிதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இந்த கரோனாவைக் கையாள்வதில் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால், மாநிலத்திலுள்ள சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் இது உதவும்.
அதேபோல கரோனாவைக் கட்டுப்படுத்த முன்களப் பணியாளர்களைக் காப்பதும் மிக முக்கியம். மருத்துவர்கள், மருந்தக ஊழியர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் என அனைவரையும் கரோனா தொற்றிலிருந்து நாம் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியை நம்மால் தோற்கடிக்க முடியும்.
கரோனா தொற்றிலிருந்து முதலில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நம்மையே ஒரு முன்னுதாரணமாகக் காட்டி மற்றவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் காக்க வேண்டும்,
இவை அனைத்தையும் செயல்படுத்த இந்தச் செயலி முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம் தேவையான விழிப்புணர்வை எளிதில் பரப்பி, கரோனா பரவல் சங்கிலியைத் துண்டிக்க முடியும். இதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம்" என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 4,926 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 முடிவுகள் - நொறுங்கிப்போன குஜராத் மாடல்!