புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தேசியப் பேரிடர் மேலாண்மை கூட்டமானது, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் தளர்வு அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஆக. 18) காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு தொடங்கியது. இதனை அடுத்து காலை 6 மணி முதல் அத்தியாவசிய காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுபானக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மருந்தகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய கடைவீதிகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து வாகனங்கள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லைகளில் வாகன சோதனை செய்யப்பட்ட அண்டை மாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றது.
தவிர, வேற எந்த வாகனங்களும் மாநிலத்திற்கும் எல்லைக்குள்ளும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...'ஸ்டெர்லைட் விவகாரத்தில் மனிதம் காத்த தீர்ப்பு' - அரசியல் ஆளுமைகளின் கருத்து