புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலின் தன்மையை அறிந்து கொள்ள, மத்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர், விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழு, 27 ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியது.
இந்த மத்தியக் குழு புதுச்சேரி முழுவதும் பயணம் செய்து களப்பணி மேற்கொண்டு, கரோனா நிவரம் குறித்த உண்மைத் தகவல்களை சேகரித்து அறிக்கையாகத் தயார் செய்து ஆளுநர் கிரண் பேடியிடம் முன்னதாக அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு மேம்படுத்தப்பட்ட அறிக்கையை இக்குழு ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறுகையில், “ஆரம்பத்தில் புதுச்சேரி அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை சரியாக இருப்பதாக உணர்ந்தோம். ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொற்றுப் பரவல் சவாலை எதிர்கொள்ள பல புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.