உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் இதுவரை 199 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சத்து 49 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 863 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ், கடந்த 15 நாள்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் விதமாக பலரும் பல வகைகளில் செயலாற்றி வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக, ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சிலர் உணவளித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதேபோல் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுகாதாரம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு ஊழியர்கள், சாலையோரத்தில் வாழும் மக்களுக்காக புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரடியாக சமையல் பணியில் ஈடுபட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : மக்களுக்கு முன்னுதாரணமான முதலமைச்சர் அலுவலகம்!