புதுச்சேரி வில்லியனூர் பகுதியை அடுத்துள்ள பொறையார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வங்கியில், வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் உறுப்பினராகி, தங்கள் பணத்தை அங்கு சேமித்து வந்தனர்.
இந்நிலையில், பொறையார் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கிருஷ்ணவேணியும் இந்த வங்கியில் பணத்தை சேமித்து வந்துள்ளார். மூதாட்டி ஒரு வீட்டில் பாதுகாவலராகவும், மற்ற நேரங்களில் பழைய பேப்பர், குப்பையை சேகரித்து அதை விற்றும் கிடைக்கும் பணத்தை, கூட்டுறவு வங்கியில் சேமித்து வந்துள்ளார். இதுவரை 10 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை, தனது வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார்.
வயது மூப்பு மற்றும் கரோனா ஊரடங்கு என்பதால், தான் சேமித்து வைத்த பணத்தை எடுப்பதற்காக கூட்டுறவு வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் 'இன்று போய் நாளை' வருமாறு கூறியுள்ளனர். அடுத்த நாளும் மூதாட்டி வந்துள்ளார். இதேபோல் தொடர்ந்து பலமுறை மூதாட்டியை வந்தும் வங்கி ஊழியர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த ஜூலை 9ஆம் தேதி தனது பேரனை அழைத்துச் கொண்டு சென்று, வங்கி ஊழியர்களிடம் தன்னுடைய பணத்தைக் கேட்டுள்ளார், மூதாட்டி. அதற்கு வங்கி ஊழியர்கள், 'வங்கியில் பலருக்கு நகை அடகுக் கடன் கொடுக்கப்பட்டதால், ஊரடங்கால் பலரும் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. அதனால் வங்கியில் பணம் இல்லை. நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லு' என்று அலட்சியமாக பதிலளித்து மூதாட்டியை திட்டி அனுப்பி உள்ளனர்.
கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வங்கி ஊழியர்கள் இல்லை என்று சொன்னதால், மன உளைச்சலுக்கு ஆளான மூதாட்டி அங்கேயே கதறி அழுதுள்ளார். இதனை வங்கியிலிருந்த சிலர் செல்போனில் காணொலியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க:வங்கிக்கடன் நெருக்கடியால் விவசாயி தற்கொலை