அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தங்களது அறக்கட்டளைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல இந்து அமைப்புகள் கோரிக்கையை முன்வைத்த பின்னர், இதுபோன்ற கோரிக்கைகள் பொருத்தமற்றது என்று விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது போல் ஒரு புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலின்படி கோயில் கட்டும் பணி நடைபெறும் என்று விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் பிலிண்ட் பரண்டே, “புனிதர்களும் பிற அமைப்புகளும் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால் நம்பிக்கை குறித்து வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது தொடர்பான இறுதி முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டிய தருணம்” என்று அவர் கூறினார்.
அயோத்தி வழக்கு கடந்துவந்த பாதை...!
உத்தரப்பிரதேச மாநில அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் 1992ஆம் ஆண்டு வரை பாபர் மசூதி இருந்தது. இந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தொடர்ந்து, அயோத்தியில் பிரதானமான, பொருத்தமான ஒரு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு அரசு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக வழங்கியிருக்கும் தீர்ப்பில், இன்னும் மூன்று மாதத்திற்குள் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தச் சொத்தை பராமரிக்கவும், அங்குக் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும் அரசே அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் இந்த அமர்வு தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தது.