இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டிற்கு கிடைத்த பெரும்பாலான பிரதமர்கள் வயது முதிர்ந்த நிலையில்தான் பிரதமர் பதவியை ஏற்றார்கள். ஆனால் இதில் ஒரு விதி விளக்காக இருந்தவர் ராஜீவ் காந்தி. தன் 40ஆவது வயதில் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற ராஜீவ் காந்தி, நாட்டின் பல பிரச்னைகளை தீர்த்து வைத்தார். சுதந்திரம் அடைந்து இன்று வரை இந்தியாவின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருவது பிரவினைவாதம். அசாம், மிசோரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்த சில மாணவர்கள் பிரிவினைவாதத்தின் மேல் ஆர்வம் கொண்டு அப்பகுதிகளில் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனை மிகச் சரியாக கையாண்ட ராஜீவ், பல துணிச்சலான முடிவுகளை எடுத்தார். அசாம் மற்றும் பஞ்சாப் அமைதி ஒப்பந்தத்தில் 1985 ஆம் ஆண்டும், மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் 1986 ஆம் ஆண்டும் கையெழுத்திட்டார்.
சுயசார்பு கொள்கை, அரபு நாடுகளுடன் நெருக்கம் போன்றவற்றால் அமெரிக்காவின் பகையை ராஜீவ் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் ராஜீவ் நல்லுறவில் ஈடுபட்டு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற சார்க் அமைப்பை தோற்றுவித்தார். இப்படி பல முடிவுகளால் உலக அரங்கில் மதிப்புமிக்க தலைவராக ராஜீவ் உயர்ந்தார். 1989ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு பிரதமர்களை இந்தியா பெற்றது. 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜீவ் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசீர் அராபத் அனுப்பிய தூதுவர், ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரிடமே தெரிவித்தார். இந்தியாவில் நிலையற்ற அரசு உருவாகாமல் இருக்க, பல நாடுகள் முயற்சி செய்வதாகவும் அவரை எச்சரித்தார்.
இதன் பிறகுதான் 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ராஜீவ் மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் குறைகள் இருந்ததா என்பதை அறிய 'வர்மா' ஆணையமும், படுகொலையில் உள்ள சதிகள் பற்றி ஆராய 'ஜெயின்' ஆணையம் அமைக்கப்பட்டன. ஜெயின் ஆணையம் ராஜீவ் கொலை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடனும் (அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை, இஸ்ரேலின் மொசாட்), விடுதலை புலிகளின் முக்கிய புள்ளியான குமரன் பத்மாநாபன் வங்கி கணக்கு வைத்திருந்த பிசிசிஐ என்ற வங்கியிடனும் மறைந்த சாமியார் சந்திராசாமி தொடர்பு வைத்திருந்ததாக ஜெயின் ஆணையம் கூறியது. கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து பார்த்தால் சந்திராசாமிக்கும், ராஜீவ் படுகொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக ஜெயின் ஆணையம் தெரிவித்தது. ஆனால் சந்திராசாமி இறக்கும் வரை ராஜீவ் படுகொலையை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு அமைப்பு சந்திரா சாமியை விசாரிக்காதது பல கேள்விகளை எழுப்பியது.
ராஜீவ் படுகொலை நடப்பதற்கு முன்பு இந்தியாவில் இயங்கி வந்த சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்தததாக ஜெயின் ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்தது. ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பது முன்னாள் பிரதமர் சந்திரசேகர், பாஜக மாநிங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமிக்கு தெரிந்திருந்தும் அவரின் உயிரை காப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கவில்லை என்று ஜெயின் ஆணையம் குற்றம்சாட்டியது. ராஜீவ் இறப்பதற்கு முன்பு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை, இஸ்ரேலின் மொசாட் அமைப்பைச் சேர்ந்வர்களின் நடமாட்டம் இந்தியாவில் அதிகமாக இருந்ததாக இந்தியா புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் படுகொலை பற்றிய ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போனது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காணாமல் போன அந்த ஆவணங்களில் வெளிநாட்டு சதிகள் பற்றியும், சந்திரா சாமி பற்றிய பல உண்மைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நரசிம்ம ராவும், சந்திரா சாமியும் 25 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்ததால் சந்திரா சாமியை கொலை பழியில் இருந்து காப்பாற்றுவதற்காக நரசிம்ம ராவ் காணாமல் போன ஆவணங்களை தேடுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. வி.பி.சிங் பிரதமராக இருந்த போதிலிருந்தே ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் பல குறைகள் இருந்ததாக ஜெயின் ஆணையம் தெரிவித்தது. பல ஆண்டுகளாகவே ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பல முயற்சிகள் நடந்ததாக ஜெயின் ஆணையம் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு நிலையான ஆட்சி கிடைத்திருக்கும். ஆனால் அதனை தடுக்கதான் சில நாடுகள் முற்பட்டு விடுதலை புலிகளை ஒரு பகடைக் காயாய் பயன்படுத்தினார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கை பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய ராஜீவ் சர்மா என்ற பத்திரிகையாளர் கூறுகிறார். சில நாடுகள் மட்டுமல்லாமல் பல இந்தியா நாட்டு அரசியல் தலைவர்களும் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தபட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார். சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி, முன்னாள் பிரதமர்கள் சந்திர சேகர், நரசிம்மா ராவ் என, இந்த சந்தேக வளையம் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் இன்று வரை ராஜீவ் படுகொலையில் உள்ள வெளிநாட்டு சதியினை சரியாக விசாரிக்காமல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தன் கால அளவினை உயர்த்தி கொண்டே செல்கிறது சிறப்பு புலனாய்வு குழு.