புதுச்சேரியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த 32 பகுதிகளில் இன்று (ஆகஸ்ட 31) முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இதற்காக முத்தியால்பேட்டை உள்ளிட்ட 32 பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் கேபினட் அறையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 32 இடங்கள் முழு ஊரடங்கு தளர்வு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், அஸ்வின் குமார், மாவட்ட ஆட்சியர் அருண், முதலமைச்சரின் செயலர் விக்ராந்த், காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீ வாத்சவா மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் 32 பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்ற உத்தரவு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தவிர மற்ற பகுதிகளை தனிமைப்படுத்தக் கூடாது என்றும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 118 அவசர கால ஊர்திகள்: முதலமைச்சர் தொடங்கி வைப்பு!