ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டு அவரது வீட்டிற்கே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏகே-47 துப்பாக்கி, செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முதலமைச்சரை கூலிப்படை கொல்லவுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக்கடிதத்தில், "கூலிப்படை கொலைகாரர்களான அவர்கள் எந்நேரத்திலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். உங்களை அவர்கள் பின்தொடர்ந்துவருகிறார்கள். எனவே, கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கொலை திட்டத்தை தீட்டிய முக்கிய நபர் நாக்பூரில் வசித்துவருகிறார்.
உங்களை கொலைசெய்வதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள ஆயுதங்கள் ஒடிசாவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பதிவுசெய்யப்பட்ட 17 கார்களின் மூலம் பட்நாயக்கை கொலைகாரர்கள் பின்தொடர்ந்துவருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தை டிஜிபிக்கும் புவனேஷ்வர்-கட்டாக் காவல் ஆணையருக்கும் உள் துறை அனுப்பியுள்ளது. முதலமைச்சருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 50 கோடி ரூபாய் பணம் கேட்டு பட்நாயக்கிற்கு பிலாஸ்பூர் சிறை கைதி மிரட்டல் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.