மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி, சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியைத் தாக்கியபோது உருவானதாக கூறப்படுகிறது. இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளின் ஹாட்ஸ்பாடாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென்று ஜூன் மாத தொடக்கத்தில் ஏரியின் நிறம் பிங்க நிறத்தில் மாறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து, ஏரியின் நீர் மாதிரியை சேகரித்த வனத்துறையினர், புனேவில் உள்ள ஏ.ஆர்.ஐ, நாக்பூரில் உள்ள என்.இ.ஆர்.ஐ ஆகிய இரண்டு ஆராய்ச்சி மையத்திற்கும் அனுப்பி வைத்து சோதனை செய்ததில் ஹாலோஆர்கீயா என்ற பாக்டீரியவால் தான் பிங்க் நிறத்தில் மாறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பொதுநல வழக்கை விசாரித்த சுனில் சுக்ரே, அனில் கிலோர் நீதிபதிகள் அமர்வு, லோனார் ஏரியின் வளர்ச்சியையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆனால், ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரும், லோனார் நகராட்சியும் அலட்சிய மனப்பான்மையுடன் இருந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என நீதிபதி தெரிவித்தார்.
அப்போது, வாதிட்ட வழக்கறிஞர் சி.எஸ். கப்டன், லோனார் ஏரியின் மேம்பாட்டிற்காக மகாராஷ்டிரா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திற்கு மாநில அரசு இதுவரை சுமார் 91 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், தற்போது வரை ஏரியானது சரியான பயன்பாட்டில் இல்லை என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இப்பிரச்னையில் மாநில பொதுப்பணித் துறை (பி.டபிள்யூ.டி), வனத்துறை, புல்தானா நகராட்சி மன்றம், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த அலுவலர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒவ்வொரு துறையில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்த்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.
லோனார் ஏரியின் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்பார்வை செய்வதற்காக நோடல் அலுவலராக புல்தானா ஆட்சியரை நியமிக்கிறோம். மேலும், மாநில வனத்துறையும் பி.டபிள்யூ.டியும் இணைந்து ஏரியை சுற்றி வேலி அமைத்து, சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மலம் கழிப்பதை தடுத்திட முடியும். அதுமட்டுமின்றி, ஏரியை சுற்றி காலையிலும் மாலையிலும் காவலர்களை நிறுத்துமாறு போல்டனா காவல் துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.