இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ”அன்புள்ள பிரதமரே, இந்தப் பாணியில் மக்களின் துயரங்களைப் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் வெட்கக்கேடானது, மனிதாபிமானமற்றது, இதயமற்றது. மக்கள் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் இழந்துவருகின்றனர்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து பாஜக அரசு கலால் வரிகளை உயர்த்துவதன் மூலம் லாபம் ஈட்டுகிறது. ஏழை எளிய மக்களை விளிம்பிற்குத் தள்ள வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டு ரூபாயாக உயர்த்துவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கும் வகையில் நேற்று சட்டத்தை நிதியமைச்சகம் திருத்தியது.
இந்தத் திருத்தம் மூலமாக, பெட்ரோலுக்கு 10 ரூபாயிலிருந்து 18 ரூபாயாகவும் டீசலுக்கு நான்கு ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் சிறப்பு கலால் வரி வரம்பை உயர்த்த முடியும்.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் சிறப்பு கலால் வரியின் வரம்பை உயர்த்துவதற்காக 2020 நிதி மசோதாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு திருத்தத்தை நேற்று தாக்கல்செய்தார்.
நாடாளுமன்ற மரபுப்படி மாநிலங்களவையில் விவாதம் நடத்தியே மசோதாவை திருத்தம்செய்ய முடியும். ஆனால், மரபிற்கு மாறாக விவாதமே இல்லாமல் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'முதலமைச்சர் நிவாரண நிதி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும்' - நாராயணசாமி