மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் பாஜக அரசு பெரும்பான்மை பெற்றுள்ளதால் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
இதனை எதிர்த்து தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வாதிட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இருந்தும் பிரதமர் மோடி மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், பாஜக அரசின் மதவாத போக்கை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைமையில் இன்று பிற்பகல் டெல்லி ராஜ்காட்டில் உள்ள ராம் லீலா மைதானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராம்லீலா மைதானத்தில் பிரதமரின் பேரணி நடக்கவிருப்பதால் அதனை கருத்தில் கொண்டு டெல்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் அனைவரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதி முன்பு சத்தியாகிரகத்தை மேற்கொள்ளவுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரை காந்தி காட்டிய வழியில் வன்முறையற்ற, நிலையான தெளிவான நோக்கத்தோடு எதிர்ப்புகளை தெரிவிப்போம்.
பாஜகவின் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி, டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் போராட்டத்தை தொடங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 14ஆம் தேதி தேசத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்ற போராட்ட பேரணியில், சோனியா காந்தி பாஜகவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது - பிரியங்கா காந்தி