உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பை ஏற்று, புதிய ராமர் கோயிலுக்கு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறங்காவல் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோயிலுக்கான அடிக்கல் நாட்டினர். இதனைத் தொடர்ந்து கோயில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
கோயில் கட்டுமான பணிகள், நிதி, நிர்வாகம் ஆகியவற்றை இந்த அறங்காவல் குழு மேற்கொள்கிறது. அதன்படி, புதிய கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியையும் இந்த குழு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீ ராமர் கோயில் கட்ட மாநில அரசு சத்தீஸ்கர் அரசு சார்பில் ரூ.101 கோடியை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பிரிஜ்மோகன் அகர்வால் அம்மாநில அரசுக்கு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், “1992 ஆம் ஆண்டு முதல் அவர்கள் சேகரித்த நிதியின் கணக்கை முதலில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மதத்தை வைத்து, பிரிவினைவாத அரசியலைப் பேசி பாஜக ஒரு வணிகத்தை மேற்கொண்டது. இதுவரை அயோத்தி ஸ்ரீ ராமர் பெயரை பயன்படுத்தி அக்கட்சியினர் சேகரிக்கப்பட்ட நிதியைக் கணக்கிட வேண்டும்” என தெரிவித்தார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் கேள்விக்கு பதிலளித்த பாஜக, ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமானத்திற்காக எந்தவொரு பங்களிப்பையும் செய்யாத காங்கிரஸுக்கு அதற்குறிய கணக்கை கேட்க உரிமை இல்லை. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முதலில் ரூ.101 கோடியை பங்களிப்பாக வழங்கட்டும். பின்னர் அவர்களுக்கு நாங்கள் தகவல்களை அளிக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு விரிவான தகவல்களை உறுதியாக வழங்குவோம். இந்த நோக்கத்திற்காக பங்களிக்க விரும்பும் அனைவரும் நன்கொடை அளிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, 11 கோடி குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நிதி சேகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது” என கூறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்குட்பட்ட சந்த்குரி கிராமம்தான் மாதா கெளசல்யாவின் சொந்த ஊராகக் கருதப்படுகிறது. இதை மனதில் வைத்து மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் நன்கொடைகள் சேகரிக்கப்படும் என்று வி.எச்.பி அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தலைசிறந்த படைப்பு: ஹுசைனாபாத் மணிக்கூண்டு