புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், 'புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றிபெறும். பொது மக்களை நேருக்கு நேராக சந்தித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதே பெரும் வெற்றியாக கருதுகிறோம்.
சட்டமன்றம் மக்கள் தேவைகளை நிறைவேற்றும் கோயிலாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தேவையானவற்றை ஆளும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்; ஆனால் புதுச்சேரியில் அப்படி அல்ல என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா கைகளில் உள்ளது. ஆட்சியில் இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிவந்த ரங்கசாமி, தற்போது துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக கூறிவருகிறார்' என்று சஞ்சய் தத் தெரிவித்தார்.