நாடு முழுவதும் கரோனா அதிகளவில் பரவி வருவதால் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை மத்திய அரசு இந்தாண்டு ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதியும், பொறியியல் கல்லூரிகளுக்கான ஜேஇஇ தேர்வை செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையும் நடத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சல் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதேபோல், மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை அருகே அதன் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பங்கேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: விதைவிதைப்பு இயந்திரம் கண்டுபிடித்த பொறியியல் கல்லூரி மாணவன்!