குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அம்மசோதா சட்டமான பின்னும் அவர்கள் அதை எதிர்த்து தினமும் கருத்து கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். கேரள அரசு இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் ஊரறிந்த ஒன்று தான் என்ற போதிலும், அவற்றிற்கெல்லாம் செவி சாய்க்காமல் மத்திய அரசு அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல், மாநிலங்கள் சி.ஏ.ஏ.வை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று கூற இயலாது, அவ்வாறு கூறும் பட்சத்தில் மேலும் சிக்கலை உருவாக்கும் என்று கூறியிருந்தார். அவரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கபில் சிபலின் கருத்தையே காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வியும் முன்மொழிந்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து சட்டப்பிரிவு 131இன் படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை அச்சட்டத்தை அவரவர் மாநிலங்களில் அமல்படுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சிங்வி, “அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க மாட்டோம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துதான் நாங்கள் கேள்வியெழுப்புகிறோம்.
அதற்காக நாங்கள் அச்சட்டத் திருத்தத்திற்கு எதிரானவர்கள் என்று பொருள் அல்ல. நாடு முழுவதும் உள்ள மக்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் ஆளும் அரசு பதிலளிப்பதில்லை. ஏன் இலங்கை, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யவில்லை என்ற கேள்விக்கும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இச்சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கி அதைக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறது” என்று கடுமையாகப் பேசியிருந்தார்.
மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், அதில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 131 வரையறுத்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை: அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்!