குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்யாலயம் என்ற தமிழ் பள்ளி செயல்பட்டுவந்தது. சுமார் 81 ஆண்டுகளாக இயங்கிய இப்பள்ளி, குஜராத் மாநிலத்தில் தமிழ் வழியில் பாடத்தைக் கற்பிக்கும் ஒரே மேல்நிலைப் பள்ளியாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது. தற்போது இப்பள்ளியில் வெறும் 31 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில, போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்பதால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டு, இப்பள்ளி மூடப்பட்டது. குஜராத்திலுள்ள தமிழ் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் மீண்டும் இப்பள்ளி உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து கோரிக்கைகள் வலுப்பெற்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு எழுதிய கடிதத்தில், "குஜராத்தின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. குஜராத்தில் தமிழ் மொழியியல் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அகமதாபாத்தில் உள்ள இந்தத் தமிழ் பள்ளி தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. குஜராத் அரசு தமிழ் மொழியியல் சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
பள்ளியின் முழுச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்க தயாராகவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தாலும், இதுவரை பள்ளியின் திறப்பு குறித்து குஜராத் அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
குஜராத்தில் ஆன்லைன் கல்வி தற்போது தொடங்கப்பட்டுள்ளது, இருப்பினும் இந்தத் தமிழ் பள்ளியின் நிலை குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்காததால், இப்பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கியாசுதீன் ஷேக், ஹிம்மட்சின் படேல், இம்ரான் கெடவாலா ஆகிய மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் நிரம்பி வழியும் நீர் நிலைகள்!