மகாராஷ்டிராவில் தியோஷா தொகுதியின் எம்எல்ஏ யசோமதி தாகூர். கடந்த இரண்டு வாரங்களாக இவரது தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் அரசு சார்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த விவரம் இவரது காதிற்கு செல்ல உடனடியாக யசோமதி தாகூர், அம்ராவதி என்னும் இடத்தில் அரசு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்-போது பொறுமையிழந்த யசோமதி தாகூர், அரசு அலுவலர்களை கண்டபடி, தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய யசோமதி, 'தண்ணீர் தருவது அரசு அலுவலரின் கடமை. அவர்கள்தான் தங்களுக்கு தண்ணீர் தரவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை, ஆகையால்தான் நான் ஆக்ரோஷமாக நடக்க வேண்டியிருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிவருகிறோம். தண்ணீர் திறந்துவிட ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இதில் பாஜக எம்எல்ஏவின் தலையீடு இருக்கிறது. இதனால், எங்கள் பகுதிக்கு கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் வராததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்' எனத் தெரிவித்தார். மேலும், யசோமதி அரசு அலுவலரை திட்டும் காணொளிக் காட்சி வலைதளப்பக்கங்களில் வைரலாகிவருவதுடன் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.