புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், ஆளுங்கட்சியான காங்கிரஸ், திமுக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தம் தொடர்பான பேச்சை முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்தார். இதனைக் கண்டித்து அதிமுக, என். ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் மீது முக்கிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது, அவையிலிருந்த காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார், செல்போனில் செல்ஃபி படங்களை எடுத்தபடி இருந்தார். அங்கு எடுத்த செல்ஃபி படங்களை தனது குழுக்களிலும் அவர் பகிர்ந்தார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் யாரும் செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால், காங்கிரஸ் உறுப்பினர் ஜான் குமார் அவையில் செல்ஃபோன் பயன்படுத்தியதுடன், முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுது, செல்ஃபி எடுத்து அதை பகிர்ந்ததை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.