புதுச்சேரி ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க தடையாக இருக்கும் தலைமை செயலர் அஸ்வின்குமாரை கண்டித்து மீனவர்கள் உள்ளிட்ட ஊர்மக்கள் ராஜ்பவன் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணன் ஏற்கனவே சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதன்படி புதுச்சேரி ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில் தலைமை செயலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி எஸ்.வி. பட்டேல் சாலை வழியாக தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர்.
இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த முதலியார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக போராட்டக்காரர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த ராஜ்பவன் பகுதி பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்சுமி நாராயணன் சாலையில் அமர்ந்து மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் உயிரிழப்பு