ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு, மாரச் 26ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக, மாநிலங்களவைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கர்நாடகா மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த ராஜீவ் கவுடா, பி.கே.ஹரிபிரசாத், பாஜவின் பிரபாகர் கோர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த குபேந்திரா ஆகியோரின் பதவிக்காலம், ஜூன் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
117 உறுப்பினர்களுடன் (சபாநாயகர் உள்பட) மாநிலத்தில் ஆட்சியிலுள்ள பாஜக நான்கு இடங்களில் இரண்டில் நிச்சய வெற்றியை உறுதி செய்யும். மீதமுள்ள இரு தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெல்லும். நான்காவது தொகுதியை வெல்வதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம் 44 வாக்குகள் தேவைப்படுவதால், எந்தவொரு கட்சியும் தனித்து நான்காவது இடத்தை வெல்ல முடியாது.
ஆகவே நான்காவது இடத்தை வெல்லும் முயற்சியில் காங்கிரசும், பாஜகவும் காய் நகர்த்துகின்றன. ஏற்கனவே, கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இந்நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் வகையில், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்தது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.
மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கிடைப்பார். மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் வெற்றிப் பெற காங்கிரஸ் விரும்பாது என, அக்கட்சியின் மாநில தலைவர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் வெற்றிப்பெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இறுதி முடிவை கட்சி தலைவர் சோனியா காந்தி எடுப்பார். ஏற்கனவே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினோம். கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்." என்றார்.
முன்னாள் பிரதமர் தேவுகவுடாவை மாநிலங்களவைக்கு அனுப்புவது குறித்த முடிவை கட்சியே எடுக்கும் எனவும் சிவகுமார் தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே போட்டியிடுவார் என, அக்கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்கு செல்லும் கார்கே