லடாக் பகுதியில் கடந்த சில நாள்களாகவே பதற்றநிலை நீடித்து வருகிறது. இந்தியா, சீனா என இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை அங்கு குவித்துள்ளன. இந்நிலையில், நேற்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் இருநாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, "நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த விவகாரத்தில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துடனும், அரசாங்கத்துடனும் காங்கிரஸ் துணை நிற்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், “சீனா எந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது, இதைச் சமாளிக்க அரசாங்கத்தின் கொள்கை என்ன? அப்பகுதியில் உண்மையில் நிகழ்ந்தது என்ன? சீனா எவ்வாறு நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்தது? அங்கு என்ன நடக்கிறது, எத்தனை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறித்து முழு உண்மைகளை நாட்டு மக்களுக்கு, மோடி தெரிவிக்க வேண்டும்” எனவும் சோனியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனப் பிரச்னையில் மெளனம் காக்கும் பிரதமர்: எதிர்க்கட்சியினர் விமர்சனம்