கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்தார். அங்கு அவர் சாமி கும்பிட்டார். தொடர்ந்து அங்கு நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு கொண்டுவந்தது. ஆனால் காங்கிரஸ் தடுத்து நிறுத்துகிறது. அம்மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராகப் போராடவில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராடுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் அதன் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளது. பிரதமரின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் அளித்துள்ள பதிலில், “மோடி அவர்களே, நாங்கள் நாட்டுக்கு எதிராகப் போராடவில்லை. உங்களின் பிரிவினைவாத வேலைக்கு எதிராகப் போராடுகிறோம்.
இந்த நாட்டை நீங்கள் உடைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தியா 1948, 1965, 1971, கார்கில் போர்களில் தக்க பாடம் கற்பித்துள்ளது. அந்தக் காயத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. நீங்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க விரும்பினால் இம்மாதிரியான பிரியாணி, மாங்கனி விளையாட்டை நிறுத்துங்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
குடியரிமை திருத்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறி 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம்புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகைசெய்கிறது.