கரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடத்திவருகிறார். இதனிடேயே, முன்னாள் அமெரிக்க தூதர் நிகோலஸ் பர்ன்ஸுடன் ராகுல் காந்தி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியர்கள், அமெரிக்கர்கள் டிஎன்ஏவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இந்தியர்களின் டிஎன்ஏக்களில் சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவை நிறைந்திருப்பதாகவும், காங்கிரஸ் தேவையின்றி அவதூறு பரப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி. சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றால் நிறைந்திருக்கும் இந்தியர்களின் டிஎன்ஏவை காங்கிரஸ் கட்சியால் பார்க்க முடியவில்லை.
போலியான அரசியல் செய்து பாரபட்சமாக நடக்கும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் கலாசார அர்ப்பணிப்பு, வேற்றுமையில் ஒற்றுமையாக விளங்கும் நாட்டை ஒன்றிணைத்துள்ளது.
கடந்த பத்தாண்டு காலமாக, சகிப்புத்தன்மை இன்மையால் பெரும் பாதிக்கப்பட்டவர் பிரதமர் மோடி. பேரிடர் காலத்தில் உருவாகும் பிரச்னைகளைத் தீர்க்காமல் அரசியல் சூழலை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் கெடுத்துவருகின்றனர். அரசியலில் திவாலாகியுள்ள காங்கிரஸ் தற்போது நாட்டின் மீது அவதூறு பரப்பிவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: இந்தியர்களின் டிஎன்ஏ-வில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது: ராகுல் காந்தி