கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளது. இக்கூட்டம் ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் பங்கேற்கவேண்டும். கரோனா சூழல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா காலத்தில் மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியாவில் அதிகமானவர்களுக்கு வேலை வழங்கும் சிறு, குறு தொழில்களின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்களைத் தணிக்கும் வகையில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், கரோனாவுக்கு எதிராகச் சரியான திட்டமிடல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா: பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் காப்பீடு!