காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பது யார் என்பதுகுறித்து விவாதிக்கப்பட்டபோது கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு தரப்பு கூட்டுத்தலைமையை வலியுறுத்துவதாகவும், மற்றொரு தரப்பு நேருவின் குடும்பத்தினரே பொறுப்பு வகிக்கவேண்டும் என வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்படுவது ஒன்றும் புதிததல்ல. காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பு குறித்து பல்வேறு கருத்துமுரண்பாடுகள் அக்கட்சிக்குள் முன்பே ஏற்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் தங்கள் சொந்த கட்சி சகாக்களிடமிருந்து கருத்து வேறுபாட்டை எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
சோனியா காந்தி
1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சரத் பவார், பிஏ சாங்மா மற்றும் தாரிக் அன்வர் சோனியாவுக்கு எதிராக கொடிபிடித்தனர். அதற்காக அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 2001ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சோனியா போட்டியிடும்போது அதற்கு எதிராக ஜிதேந்திர பிரசாதா நின்றார். ஆனால், சோனியா காந்தியிடம் அவர் தோற்றுப்போனார்.
சீதாராம் கேஷரி
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சீதாரம் கேஷரிக்கு எதிராக ஒரு குழு கட்சிக்குள் இருந்து கிளம்பியது. அக்குழுவில் இருந்த பெரும்பாலானோர் சோனியா காந்தியின் விஸ்வாசிகளாக இருந்தனர். அப்போதைய சூழ்நிலையில் சோனியா, காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் தன் வசம் வைத்திருக்க விரும்பினார்.
பி.வி. நரசிம்ம ராவ்
90களின் முற்பகுதியில் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு எதிராக ஒரு குழு கிளம்பியது. அதன்விளைவாக வெளியேற்றப்பட்ட என்.டி திவாரி, அர்ஜூன் சிங் ஆகியோர் புதிய கட்சியைத் தொடங்கினர்.
ராஜிவ் காந்தி
1987ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும், சிக்கல் ஏற்பட்டது. ராஜிவ் காந்தி தலைமையில் அமைந்த அமைச்சரவையில், நிதியமைச்சராக இருந்து பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்ட வி.பி. சிங் காங்கிரஸ் கட்சியின் ஊழல் குறித்து கேள்வி எழுப்பினார். அமைச்சரவையில் இருந்து வெளியற்றப்பட்ட அவர், கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இதன்பின்னர் அவரும் புதிய கட்சியைத் தொடங்கி பயணிக்கத் தொடங்கினார்.
இந்திரா காந்தி
1969ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி, ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் விவி கிரியை ஆதரித்ததால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நீலம் சஞ்சீவ் ரெட்டி தோல்வியைத் தழுவினார். இதனால், அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் நிஜலிங்கப்பா இந்திரா காந்தியை கட்சியிலிருந்து நீக்கினார்.
1977ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் தோல்வி கிட்டியது. அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதாலே காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே. பிராமனந்த ரெட்டியும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவருமான ஒய்.பி. சாவனும் இந்திராவுக்கு எதிராகத் திரும்பினர். அப்போதும், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
ஜவஹர்லால் நேரு
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர புருஷோத்தம் தாஸ் டாண்டன், கே.எம். முன்ஷி, நார்ஹர் விஷ்ணு கட்கில் உள்ளிட்டோருடன் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தனது விருப்பத்தை 1950ஆம் ஆண்டு டாண்டன் தெரிவித்தார்.
1951ஆம் ஆண்டு நேரு காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்பு காங்கிரஸ் செயற்குழுவில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. பின்பு டாண்டன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அக்டோபர் மாதம் அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 'பாஜகவுடன் தொடர்பு?' - ராகுல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார்... மூத்தத் தலைவர்கள் பதிலடி!