கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த இளம் தலைவர் சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை வளைத்துப்போட பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியிருந்தார். காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோருடன் பாஜக தலைவர்கள் நடத்திய 'குதிரை பேரம்' தொடர்பான ஆடியோவை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இது ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், ராஜஸ்தான் பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜெயின், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வர் லால் சர்மா ஆகியோர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதில் ஆளும் அசோக் கெலாட் அரசை கவிழ்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்க ஆடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து ராஜஸ்தான் அரசும், சிறப்பு செயல்பாட்டுக் குழுவும் (Special Operations Group) முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். மேலும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மேலும், இது குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், சஞ்சய் ஜெயின், பன்வர் லால் சர்மா ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கான கறுப்பு பணத்தை ஏற்பாடு செய்தது யார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
இது தொடர்பாக காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகியோரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளோம். இது குறித்து விளக்கமளிக்க அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
பாஜகவுடன் இணைய குதிரை பேரம் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாடுகளுக்கு சச்சின் பைலட் தானாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதலமைச்சர் பதவியும், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியும் முற்றிலுமாக கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எம்எல்ஏக்களை பாஜகவிடம் இழக்க நேரிடுமோ?' - காங்கிரஸ் அச்சம்