மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணியாக போட்டியிட பல நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஷீலா தீட்சித் அதற்கு தடையாகவே இருந்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே சுமுக உறவு ஏற்பட உதவி வந்ததாக தகவல் வெளிவந்தது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதிசெய்ய காங்கிரஸ் மூத்தத் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். டெல்லியில் மட்டுமில்லாமல் பஞ்சாப், ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி ஆலோசித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
ஏழு தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் ஐந்து தொகுதிகளை ஆம் ஆத்மி கேட்பதாகவும், இரண்டுத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளையும், ஒரு இணை வேட்பாளரை நிறுத்தக் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பிரிஜேஷ் கோயல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜய் மக்கான் அந்தத் தொகுதியை கூட்டணிக்காக விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.