வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராடிவருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையின் காரணமாக போராட்டத்தை ஒடுக்க டெல்லி காவல்துறையினர் பல முயற்சிகளை செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, வன்முறையின் போது பொய்யான செய்திகளை வெளியிட்டதாக சில பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், வழக்கை எதிர்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் அடங்கிய சட்டக்குழுவை காங்கிரஸ் அமைக்கவுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தங்கா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டப் பிரிவு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அந்த சட்டக்குழு உறுப்பினர்கள் தலைநகரின் எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்திக்கவுள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள், குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கப்படும் என அந்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்த தீர்மானத்தில், "போராட்டத்தின் போது காணாமல் போன விவசாயிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு சிறைகள், காவல்நிலையங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல விவசாய சங்கங்களுக்கு உதவ வேண்டும். அமைதியான வழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் விதமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.