தான் தனியாகப் போராடிக்கொண்டிருப்பதாக குஜராத் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் கடந்த வாரம் குஜராத் சட்டப்பேரவையில் கூறியிருந்தார். அதை நினைவுபடுத்திப் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விர்ஜி தும்மர், "இந்தச் சட்டப்பேரவையில் நிதின் பட்டேல் தனித்துவிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் அவருடன் இருக்கிறது.
பாஜகவில் அவர் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தால் அவர் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணையலாம். அப்படி இணைந்தால் அவர்தான் முதலமைச்சர்.
பட்டேல் எங்கள் கட்சியில் இணைந்தால், அவரை முதலமைச்சராக்க வேண்டியது என் பொறுப்பு. எங்கள் (காங்கிரஸ்) கட்சியில் இணைந்தால் அவர் எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
விர்ஜி தும்மர் சட்டப்பேரவையில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது நிதின் பட்டேலும் அங்குதான் இருந்தார். இருப்பினும் இதற்கு அவர் பதிலேதும் கூறவில்லை. 182 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் தற்போது பாஜகவிடம் 103 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியிடம் 73 உறுப்பினர்களும் உள்ளனர்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் நிதின் பட்டேலுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்தது, இருப்பினும் பாஜக தலைமை விஜய் ரூபானியை முதலமைச்சராக நியமித்தது.
இது குறித்து குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வாகனி கூறுகையில், "நிதின் பட்டேல் கூறியதை காங்கிரஸ் கட்சியினர் தவறாகப் புரிந்துகொண்டு இப்போது மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: 50 நிமிடங்களில் மூன்று பரோட்டா சாப்பிட்டால் லைஃப் டைம் செட்டில்மென்ட்!