டெல்லி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காங்கிரஸை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அப்போது அவர் பேசுகையில்,
'ஆம் ஆத்மி அரசாங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் அமைதி திரும்ப உழைத்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மதத்தின் ரீதியில் அடையாளம் காண முயற்சிக்கிறார்.
டெல்லி பேரணியில் சோனியா காந்தி, 'பிரச்னையை முடிக்கப் போராடு' என்றார். இந்தப் பேச்சு வன்முறையைத் தூண்டியது.
இந்த வன்முறையை சாதகமாக்கி உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பது காங்கிரஸ் செய்யும் சிறுபிள்ளைத்தனமான அரசியல்.
இதுபோன்ற கண்ணியமற்ற அரசியல் விளையாட்டுகளை இரு கட்சிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் விளையாட்டு ஆபத்தானது மட்டுமின்றி கண்டனத்துக்குரியது. வடகிழக்கு டெல்லியில் அமைதி நிலவ பாஜக போராடுகிறது. கடந்த இரு நாட்களாக அங்கு அமைதி திரும்பியுள்ளது' எனக் கூறினார்.
மேலும், 'டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட காவலர் ரத்தன் லால் மற்றும் உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா ஆகியோர் குறித்து மற்ற கட்சிகள் வாய்திறக்க மறுப்பதேன்?' என்றும் அவர் வினாயெழுப்பினார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள்-ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறையில், இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித்துடன் நேர்காணல்!