கடன் அட்டைகள், பண அட்டைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பணமில்லாப் பரிவர்த்தனையை அமெரிக்கா உலகமயமாக்கிவிட்டது. கூட்டமான உணவகங்களில் சாப்பிடும்போதோ ஆன்லைன் வர்த்தகச் சந்தைகளிலோ ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போதோ சீன மக்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் வாலெட்டுகளையும் கியூ.ஆர். குறியீட்டையும் பயன்படுத்திவருகின்றனர்.
ஏற்கெனவே சுமார் 8.3 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் திறன்பேசிகளையும் சமூக ஊடக செயலிகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்துகின்றனர். ரொம்பவும் ஆச்சர்யமூட்டும் சேதி என்னவென்றால், பிச்சைக்காரர்கள் கியூ.ஆர். குறியீட்டின் மூலம் பிச்சையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கிறது!
சீனாவின் அமேசான் எனப்படும் அலிபாபா, சீனாவின் பேஸ்புக் எனப்படும் டென்செண்ட் ஆகிய ஊடக ஜாம்பவான்கள் பணம்செலுத்தும் வாயில்களாக வங்கிகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. சில்லறை விற்பனையாளர்கள் கடன் அட்டை மூலம் பணம்செலுத்தும்போது வங்கிகளுக்கு 0.5%- 0.6% செயலாக்கக் கட்டணமாகப் பிடிக்கப்படுகிறது.
இதுவே, மொபைல் வாலெட்டுகள் மூலம் பணம்செலுத்துகையில் 0.1% செயலாக்கக் கட்டணம்தான் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அலிபாபாவின் அலி பே, விசாட்பேவின் டென்சென்ட் செயலிகள் மூலம் 12.8 டிரில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னணி இதுதான். உலக அளவிலான மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில், பாதி, சீனாவில்தான் நடக்கிறது.
ஆப்பிரிக்காவுக்கு சாதகம்
பணமற்ற இணையவழிச் செலுத்தல் புரட்சியானது சீனாவால் தொடங்கப்பட்டு, வங்கிவசதிகள் குறைவாக உள்ள ஆப்பிரிக்காவில் அதிவேகமாகப் பரவலாக்கப்பட்டுள்ளது. அங்கே, சீனா கொண்டுபோய் இறக்கிய முதலீடுகளாலும் தொழில்நுட்பத்தாலும் இப்போது 4 ஜி தகவல் தொடர்பு, திறன்பேசிகள், மொபைல் செலுத்தல்வசதி ஆகியவை தாராளமாகியுள்ளன.
இந்தியாவில் முதன்முதலாக கடந்த அக்டோபரில் யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த செலுத்தல் இடைமுகப் பரிவர்த்தனைகளைவிடக் குறைவாக அட்டைகள் வர்த்தகம் செய்யப்பட்டன. கூகுள் பே, போன் பே, பீம் ஆகியவற்றின் மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெருநகரங்களில் பெங்களூரு (38.10%) முதலிடத்திலும் ஐதராபாத் (12.5%) மற்றும் டெல்லி(10.22%) ஆகியன அடுத்த இடங்களிலும் உள்ளன.
பெங்களூருவை மையமாகக் கொண்ட கட்டணவாயிலான ‘ரேசர் பே’ இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அலிபாபா, விசாட் ஆகிய செலுத்தல்செயலிகள், வங்கிச்சேவைக்கு மாற்றீடாக இருந்தாலும், இவ்விரண்டு மொபைல் வாலட்டுகளும் அந்தந்தப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு, ஒன்றிணைந்து செயல்படவும்செய்கின்றன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பேஸ்புக் நிறுவனமானது, 2020-ல் தன்னுடைய டிஜிட்டல் கிரிப்டோ நாணயமான ‘லிப்ரா’வை அறிமுகப்படுத்தவுள்ளது. அத்திட்டத்தைச் செயல்படுத்தும் பயணத்தில் பல படிகளைக் கடந்து முன்னேறியுள்ளது. லிப்ராவுக்கு இணையாக சீன அரசும் அதன் மைய வங்கியின் மூலம் ஒரு டிஜிட்டல் நாணயத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அடுத்த ஆண்டின் நடுவில் இது நடைமுறைக்கு வரக்கூடும். முன்னதாக இந்த ஆண்டில், உலகளாவிய முதலீட்டுச் சந்தையின் முன்னணி வங்கியான ஜேபி மார்கன் சேஸ் அன்கோ (ஜேபிஎம்), இந்தப் போட்டியில் குதித்தது. அதன் கிரிப்டோ நாணயமான ‘காயின்’, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மின்னல்வேகத்தில் பணப் பரிமாற்றம்செய்யப் பயன்படும் பிளாக்செயின் நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது.
லிப்ரா எப்படி வேலைசெய்யும்?
பேஸ்புக் நிறுவனம், லிப்ராவை சர்வதேச டிஜிட்டல் நாணயமாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. ஆனால், சீனா டிஜிட்டல்முறை பணம்செலுத்தலை அதிகரித்தால், லிப்ராவானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கித்துறை, ஒழுங்குமுறை அமைப்புகளின் தடங்கலை எதிர்கொள்ளநேரிடும். லிப்ரா ஒரு கிரிப்டோ நாணயம்.
எல்லா கிரிப்டோ நாணயங்களும் டிஜிட்டல் நாணயம்தான்; ஆனால் எல்லா டிஜிட்டல் நாணயங்களும் கிரிப்டோ அல்ல! லிப்ராவை, உலகின் எந்த மூலையிலிருந்தும் கட்டணமில்லாமல் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மாற்றிவிடமுடியும். கிரிப்டோ நாணயமான பிட்காயினைப் போல லிப்ராவின் மதிப்பு ஏறியிறங்காது. இதன் மதிப்பிறக்கம், டாலர், யூரோ, யென் ஆகியவற்றின்படியானது.
அதாவது, லிப்ராவை ஒருவர் வாங்குகிறார் என்றால், அதற்குச் சமமான அளவு ஒரு வங்கிக் கணக்கில் டாலராக, யென்னாக, யூரோவாக செலுத்தப்படும். இந்த முதலீடுகளுக்கான வட்டியும் வரும். லிப்ராவை மீண்டும் டாலராகவோ யூரோவாகவோ மாற்றுவதற்குப் பதிலாக, பேஸ்புக் நிறுவனத்தின் ‘கே லிப்ரா’ பரிவர்த்தனைக் கட்டணத்தைச் செலுத்தும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இலாபநோக்கற்ற அமைப்பின் கீழ் லிப்ரா இயங்கவுள்ளது. அது பயன்பாட்டுக்கு வரும்போது எந்த நிறுவனமும் இந்த டிஜிட்டல் நாணயத்தின் வாலட்டுகளை உருவாக்கிக்கொள்ளமுடியும். பேஸ்புக், அதன் மெசஞ்சர் சேவை மற்றும் வாட்சாப் ஆகியவற்றை உலகம் முழுவதும் 27 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் அனைவரும் லிப்ராவை டிஜிட்டல்முறையில் பணம்செலுத்தவும் முதலீடுசெய்யவும் கடன் தரவுமான டிஜிட்டல் பணமாக மாற்ற விரும்புகின்றனர். பேஸ்புக் பேதான், முதலில் பணம்செலுத்தும் தளமாகத் தொடங்கப்பட்டது. பேஸ்புக்கின் வாட்சாப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் ஆகியவை மூலமாக பணம்செலுத்தப்பட்டது.
இந்தியாவில் டிஜிட்டல் செலுத்துகையில் சோதனை ஒன்றை வாட்சாப் செய்துபார்த்தது. வங்கிகள், மற்றும் நிதிநிறுவனங்களென 100 நிறுவனங்கள் லிப்ரா சமூகத்தில் உறுப்புகளாக ஆக்கப்பட்டுள்ளன. மேற்குலகின் மிகப்பெரிய ஜேபிமார்கன் சேஸ் வங்கியும் இதில் கைகோர்க்கிறது; ஆனால், ஜேபிஎம் நாணயம் எனும் சொந்தப்பெயரில் களமிறங்குகிறது.
லிப்ரா செயல்திட்டத்திலிருந்து மாறுபடுவது மாஸ்டர்கார்டு, விசா, பே பால், இ பே ஆகியவற்றுக்கு பெரும் அடியாக இருக்கும். உபெர் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியன லிப்ரா முறையை மட்டுமே ஏற்கும். சட்டவிரோத கும்பல்கள் போதைப்பொருள் கடத்தவும் சொத்துகுவித்தவர்கள் சட்டவிரோதப் பணத்தைக் கடத்தவும் லிப்ராவைப் பயன்படுத்தக்கூடும் எனும் ஐயமும் எழுந்துள்ளது.
இதன்பொருட்டு, நுகர்வோர் உரிமைகள், நிதிநிலைமையின் நிலைப்புத்தன்மை தொடர்பாக கவலையும் ஏற்பட்டுள்ளது. பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவுக்குள் லிப்ராவை உள்ளே புகவிடா எனும் நிலையில், லிப்ரா டிஜிட்டல் பணத்துக்குப் பதிலாக, அரசாங்கத்தின் வழியாக கிரிப்டோ பணத்துக்குத் தாவத் திட்டமிட்டுள்ளது. அப்படியொரு சூழல் வந்தால் 2020 ஜூனில் லிப்ரா வெளியிடப்பட வாய்ப்பில்லை.
டாலர் ஆதிக்கத்துக்கு செக்
இதற்கிடையில் சீனா, அதன் சொந்த கிரிப்டோ நாணயமான, மைய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தை வெளியிடத் தயாராகிவருகிறது. நிலைமை நெருக்கடியாக மாறினால், சர்வதேச மாற்று நாணயமான டாலரின் ஆதிக்கம் பாதிப்பிற்குள்ளாகக்கூடும்.
குறிப்பாக, வளர்ந்துவரும் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் டாலரிலிருந்து சர்வதேச சீன டிஜிட்டல் நாணயத்துக்கு மாறலாம். இதனால், வர்த்தக சந்தை, 5 ஜி சேவைகள், உயர்நுட்பத் துறைகளில் சீனா - அமெரிக்கா இடையில் உள்ள கடும் போட்டி, டிஜிட்டல் நாணயத்திற்கும் பரவும்.
சீனத்தின் டிஜிட்டல் நாணயமானது சர்வதேச நாணயமாக மாறக்கூடும் என்றும் இதுவரை டாலர்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பன்னாட்டு வர்த்தகம் முழுவதையுமே பதிலீடு செய்யும் என்று பேங்க் ஆஃப் இங்கிலாந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் லிப்ராவை அனுமதிக்காவிட்டால், பேஸ்புக் நிறுவனம் அதன் டிஜிட்டல் நாணயத்தை ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியாவில் கொண்டுவந்துவிடும்.
இந்தியாவில் நுகர்வோர் பரிவர்த்தனையில் 72%, இன்னும் ரொக்கம் மூலமாகவே நடக்கிறது. சீனத்தை ஒப்பிட இது இரண்டு மடங்குக்கும் மேல் ஆகும். ஊரகப் பகுதிகளில் இணையவசதி போதுமளவுக்கு இல்லாததால், சில்லறை விற்பனையாளர்கள் இன்னும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதில் சுணக்கம் இருக்கிறது.
ஆகையால், இந்தியாவில் தனிநபர் டிஜிட்டல் பரிவர்த்தனை இன்னும் வளர்முக நிலையிலேயே இருக்கிறது. 2017-ல் சீனாவின் தனிநபர் டிஜிட்டல் பரிவர்த்தனையானது 96.7 எனும் அளவில் இருக்க, இந்தியாவிலோ 2015-ல் 22.4 ஆக இருந்தது.
பணமில்லாப் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது. ஆனாலும் பணத்தாளின் பயன்பாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துவிடவில்லை. தற்போதைக்கு, ஒரு கோடி இந்தியர்கள் யு.பி.ஐ. சேவை மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திவருகின்றனர்.
இந்திய தேசிய பணம்செலுத்துகை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திலிப் அஸ்பேவோ, குறைந்தது 5 கோடி பேரையாவது இதற்குள் கொண்டுவருவதை இலக்கு வைத்திருக்கிறோம் என்கிறார். ஏற்கெனவே அலிபாபா குழுமத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள பே டிஎம், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், வாட்சாப் மூலம் பணம்செலுத்துதலை விரிவுபடுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
ரத்தன் டாடாகூட பே டிஎம்-ல் தனிப்பட்ட முதலீடுகளைச் செய்துள்ளார். வர்த்தகச் சந்தை மூலமாக சீன அரசு, பேஸ்புக் மற்றும் பிற தனியார் கட்டணவாயில்கள் ஆகியவை பீம் போன்ற உள்நாட்டுச் செயலிகளுடன் போட்டியிட முயல்கின்றன. இந்தியாவில் உள்ள 130 கோடி பேரையும் சிறிது காலத்திற்குள் பணமில்லாப் பரிவர்த்தனைக்குக் கொண்டுவருவதற்கும் இதில் வெற்றியடையவும் கடுமையான போட்டியை எதிர்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
வரவுள்ள டிஜிட்டல் பொருளாதார காலகட்டத்தில் பின்தங்கிவிடாமல் இருக்க நாடு போராடியாகவேண்டும். இதை உணர்ந்துள்ளதால், சர்வதேச கொடுக்கல்வாங்கல் சேவைகளை பீம் யு.பி.ஐ. மூலம் வழங்க இந்தியா தயாராகிவருகிறது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில், சோதனையோட்டமாக இதன்படியான கட்டணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
விரைவாக முன்னேறும் இந்தியா
பணமில்லா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. அலி பே மற்றும் விசாட் பே ஆகிய கட்டணச் செயலிகள் சீனச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும்நிலையில், இந்தியாவில் கூகுள் பே, அமேசான் பே மற்றும் பே டிஎம் போன்ற 87 செயலிகள் வர்த்தகத்தில் உள்ளன.
சீனாவைப் போல அல்லாமல் இங்கு புதிய மற்றும் தொடக்கநிலை நிதிச்சேவை நிறுவனங்களுக்கு கூடுதலான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் டிஜிட்டல் பணம்செலுத்துகையானது 2015 முதல் இப்போது ஐந்து மடங்காக ஆகியுள்ளது. இந்திய தேசிய பணம்செலுத்துகை முகமையின் கீழ் இயங்கும் யு.பி.ஐ., உடனடியான மொபைல் பணம்செலுத்தலைச் சாத்தியமாக்குகிறது.
பல்வேறு வங்கிக்கணக்குகளுடன் செலுத்தல்செயலிகளை இணைத்த முறையிலான டிஜிட்டல் பரிவர்த்தனையை யு.பி.ஐ. கொண்டுவந்தது. உலகளாவிய பணமில்லாச் சந்தையில் ஓர் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்றால், பணமில்லாச் செலுத்துகையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு பயணிக்கவேண்டும்.