புதுச்சேரியில் பல்வேறு சாலைகள் பராமரிக்கப்படாமல் குண்டும்குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த ஈசிஆர் சாலைப்பள்ளத்தில் விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனைக் கண்டித்து அப்போது மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்காலிக சாலைகள் போடப்பட்டன. ஆனால், புதுச்சேரியின் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும்குழியுமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், சாலைகளைச் சரியாகப் பராமரிக்காத பொதுப்பணித் துறையைக் கண்டித்து புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். சேதமடைந்த சாலைக்கு மாலை அணிவித்தும் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வைத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சகாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குண்டும் குழியுமான சாலைகள் குறித்து உழவர்கரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று எங்கள் போராட்டத்தைக் கண்ணீர் அஞ்சலி போராட்டமாக முன்னெடுத்துள்ளோம். அரசு உடனடியாக இச்சாலைகளைச் செப்பனிடவேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி பெரியளவில் போராட்டத்தை நடத்துவோம் “ என்றார்.
இதையும் படிங்க: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் - பட்டா வழங்க பொதுமக்கள் மனு