இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினமான இன்று வழக்கத்தை விட 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்து 1.1 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். இதற்கு முன், 2013ஆம் ஆண்டு 1.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்ப நிலை பாதிவாகியிருந்தது.
அமர் பார்க், இந்திரலோக், சாஸ்திரி நகர், ஆசாத் மார்க்கெட், சாரிரோஹில்லா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனி சூழ்ந்ததால், வாகனம், பொதுமக்கள் நடமாட்டம் 100 மீட்டர் தொலைவுக்குள் மட்டுமே காணமுடிந்தது. டெல்லியில் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான குளிர் நீடிக்கும். அதேபோல், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான மூடுபனி நிலவும்.
மேலும், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு உறைபனி நீடிக்கும். காற்றின் தர அட்டவணை படி, 0-50 டிகிரி அளவு காற்றின் தரம் பதிவானால் இயல்பு நிலை, 51-100ஆக பதிவானால் திருப்திகரமானவை, 101-200 என்ற அளவில் இருந்தால் மிதமானவை, 201-300 டிகிரி அளவில் பதிவானால் மோசமானவை, 301-400ஆக இருந்தால் மிகவும் மோசமானவை, 401-500 என்ற அளவில் பதிவானால் கடுமையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.