ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் கடந்த மே மாதம் ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வபோது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைமையகமாக விசாகப்பட்டினம், அரசின் தலைமையிடமாக அமராவதியும் செயல்படும். மேலும் நீதித்துறை தலைமையிடமாக குர்னூல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெகன் கூறுகையில், ‘மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமநிலையோடு முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கையை சமர்பித்த பின் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.
முந்தைய ஆட்சியில் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவித்த அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தலைநகரை உருவாக்க ரூ.1.09 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றப்பின் அந்த பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனிடையே தற்போது மூன்று தலைநகரங்கள் குறித்த அறிவிப்பை ஜெகன் மோகன் வெளியிட்டிருக்கிறார்.
மூன்று தலைநகரம் என்ற திட்டம் மிகவும் ஆபத்தானது என கூறிய முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, உங்களுக்கு ஏன் அமராவதி மேல் கோபம் என்றும் மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், தற்போது ஆந்திர மாநிலத்திற்கு ஒரு தலைநகரம்கூட இல்லாமல் இருக்கும் நிலையில் மூன்று தலைநகரம் உருவாக்க இருப்பதாக ஜெகன் மோகன் அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று விமர்சித்தார்.
இதே வேளையில் தலைநகர் திட்டத்திற்காக நிலங்களை அளித்த அமராவதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த அறிவிப்பால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமராவதியை மட்டும் தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் வேலாகாபுடி, ராயாப்புடி, கிஷ்தாபாலேம், மண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.