மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது.
சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும்.
ஆனால் தற்போது கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் ஏற்படக்கூடும். இருப்பினும் மகாராஷ்டிரா மேலவையில் இரண்டு உறுப்பினர் பதவிகளை அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நியமிக்கலாம்.
இப்போது காலியாக இருக்கும் இந்த மேலவை உறுப்பினர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்துவருகிறார். இதனிடையே, இந்த விவகாரத்தில் தனக்கு உதவும்படி மோடிக்கு தாக்கரே கோரிக்கைவிடுத்ததாகக் கூறப்படுகிறது.
இல்லையெனில், ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு விவசாயிகளால் பெருமை: பிரதமர் மோடி