அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று காலை கரையைக் கடந்தது. ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபோனி புயல் தற்போது மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதிதீவிர புயலான ஃபோனி ஒடிசாவின் கட்டக் நகருக்கு வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், பாலாசோர் பகுதிக்கு தென்மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த ஆறு மணிநேரத்தில் ஃபோனி அதிதீவிர புயலிலிருந்து தீவிர புயலாக வலுவிழக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபோனி புயலின் எதிரொலியாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்று வீசியது. இதன் விளைவாக பல மின் கம்பங்கள், மரங்கள் அடியோடு சாய்ந்தன. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபோனி புயல் பாதிப்பு தொடர்பாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அலுவலர்களுடன் அம்மாநில தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.