நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 26ஆவது ஆதீன கர்த்தராக இருந்து கடந்த ஆண்டு சித்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளுக்கு ஆலயம் கட்டப்பட்டு, அதன் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று(அக்.30) நடைபெற்றது.
இதில் பங்கேற்று வழிபாடு நடத்திய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது. அதனால்தான் நாட்டின் பொருளாதாரம் 9 விழுக்காடு உயர்ந்தது. இன்று நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 8.1 விழுக்காடாக உள்ளது.
பிகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கரோனா காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதையடுத்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி குறைப்பு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருதல், மக்களைப் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிட்டுவிட்டு, பாஜக அரசு பாகிஸ்தான், சீனாவைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியிலும் ஆட்சி அமைவது உறுதி.
புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்க் கட்சிகள் அல்ல. எங்களுக்கு எதிர்க்கட்சி கிரண்பேடி தான். அவர்களை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது.
மாநில வளர்ச்சிக்கு எதிராக அவர் தொல்லை அளித்து வருகிறார். ஒருபக்கம் மத்திய அரசின் தொல்லை, மறுபுறம் கிரண்பேடி தொல்லை, மற்றொருபுறம் செயல்படாத எதிர்க்கட்சி இவற்றை வைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் 9 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: "வேறுவழியின்றி ஒப்புதல் அளித்ததற்கு நன்றி, என்றும் வெல்லும் சமூகநீதி" - ஸ்டாலின்