புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துவந்த நமச்சிவாயம் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து புதிய காங்கிரஸ் தலைவராக டெல்லி தலைமை ஏவி சுப்பிரமணியத்தை நியமித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், புதுச்சேரி மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்பிரமணியத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் புதுச்சேரியில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ,எதிர்க்கட்சியாக செயல்படுவதில்லை எதிரிக்கட்சியாக செயல்படுகிறார், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை. ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்து வருகிறார். ஆனால் அது பலிக்காது என்று கூறினார்.
இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல, குறிப்பாக கிரண்பேடி எதிர்ப்பையும், மத்திய அரசு நமக்கு தொல்லை கொடுப்பதையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி குழப்பங்களை உண்டாக்கி வருகிறார் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.