நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகியுள்ளன.
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் இன்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித் துறை சோதனைக்கு எதிராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, ‘தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்து கட்டுப்பாடுகளும் தேர்தல் ஆணையத்தின் கீழ் வரவேண்டும். ஆனால் இந்தச் சோதனை பிரதமரின் கீழ் நடந்துள்ளது. அனைத்துக் கட்சியையும் தேர்தல் ஆணையம் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு கட்சிக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படக் கூடாது’ என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘மோடி நீங்கள் யார். நீங்கள் வரும் தேர்தலின் மூலம் போகப்போகும் பிரதமர். மோடியிடமிருந்து ஜனநாயக இந்தியாவை மோடியிடமிருந்து காப்பாற்ற நான் போராடுகிறேன்’ என்று கூறினார்.
இதற்கு முன்பாக மேற்கு வங்கம், கர்நாடக முதலமைச்சர்கள் ஆகியோர் நடுவீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் தமிழ்நாட்டில் திமுக வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது.