உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்றிருந்தனர்.
ஆனால், அவர்களை அங்கு செல்லவிடாமல் உத்தரப் பிரதேச காவல் துறை தடுத்து நிறுத்தியது. இருப்பினும், தள்ளுமுள்ளுக்கிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் தலித்துகளை மனிதர்களாக கருதுவதில்லை என ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர்களை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பது வெட்ககேடான உண்மை. அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகவில்லை என முதலமைச்சர், காவல் துறையினர் ஆகியோர் கருதுகின்றனர். ஏனெனில், அவர்களும் பெரும்பாலான இந்தியர்களும் அப்பெண்ணை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவல்லை" என பதிவிட்டுள்ளார்.