இந்திய அறிவியல் கழகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த முதல் தேசிய ஆய்வுப் பணியை மேற்கொண்டு வரும் விஞ்ஞானி ரவிந்திரநாத், காலநிலை மாற்றங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதிலும் திட்டமிடலிலும் இந்தியா பின்தங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
காலநிலை அறிவியலை மதிப்பிடுவதற்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு ஒழுங்கற்று இருக்கும், கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும், வறட்சி ஏற்படும், வெள்ளம் வரும், அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கும், இப்படி பல்வேறு பிரச்னைகளை இந்தியா சந்திக்கப் போகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், வாழ்வாதாரப் பிரச்னைகளை தற்போதே நம் சமூகம் சந்தித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் கோடிக்கணக்கான மக்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ள வேளையிலும், அதுகுறித்த புரிதலற்று பலர் இருக்கின்றனர்.
இதற்கு தீர்வு காணத்தான் ரவிந்திரநாத் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் காலநிலை தொடர்பான கொள்கைகளை வகுத்து அதனை இந்திய அரசாங்கத்திடமும், ஐக்கிய நாடுகளிடமும் ஒப்படைக்க இருக்கிறார்.
மனிதர்களின் நடவடிக்கையால் உலக வெப்பமயமாதலின் அளவு ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என்று அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் (Intergovernmental Panel on Climate Change - IPCC) 2018ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இது 1.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டலாம் எனவும் கூறப்படுகிறது.
2019, மார்ச் மாதம் இந்தியாவின் இமாலயா பகுதியில் காலநிலை மாற்றம் குறித்து ரவிந்திரநாத் ஆய்வு மேற்கொண்டார். இதில், இமாலய பரப்பை ஒட்டியுள்ள 12 இந்திய மாநிலங்களும் சமாளிக்க முடியாத அளவு பாதிப்பை சந்திக்க இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம், வனங்களைப் பாதுகாப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில், காலநிலை மாற்றங்கள் விவசாயப் பயிர்களின் மீது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தரவுகளை சேகரிக்க வேண்டும். நம்மிடம் எதுபற்றியும் சரியான தரவுகள் இல்லை, இந்தியாவில் மட்டும் 300 மாவட்டங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. எந்த மாவட்டத்தில் விளைச்சல் அதிகம், எங்கு விளைச்சல் குறைவு என்ற தரவுகளை சேகரித்தல் அவசியம்.
விவசாயம், வனங்களின் பாதுகாப்பு மீது கவனம் செல்லுத்தும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு, அதன் பணி நீண்டகாலம் சிறப்பாக தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
காலநிலை மாற்றமானது ஒரு தேசத்தின் விவசாயம், வனங்கள், சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றின் மீது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் தரவுகளை சேகரித்தால்தான், அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட முடியும் என்கிறார் ரவிந்திரநாத். இப்படி காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு விஷயங்களை வலியுறுத்தும் ரவிந்திரநாத்தின் காலநிலை தொடர்பான கொள்கைகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் அவருடைய குழுவினர் அதை இந்திய அரசாங்கத்திடமும், ஐக்கிய நாடுகளிடமும் ஒப்படைக்க உள்ளனர்.
காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னே நிகழ்கிறது. இனி இயற்கை வளத்தை சுரண்டும் கார்ப்ரேட்டுகளை ஆதரிக்கக் கூடாது. சக மனிதனின் நலன் மீது அக்கறை கொண்ட சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நம் குழந்தையின் குழந்தையும் கூட இந்த பூமியில் வாழ முடியும் என ஆஸ்கர் விருது பெறும் வேளையில் நடிகர் டிகாப்ரியோ சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்.
courtesy: Indiaspend