உலகின் பல நாடுகள் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவரும் இந்த வேளையில், அதிலிருந்து முழுமையாக வெளிவந்துள்ளது நியூசிலாந்து. ஜூன் 1ஆம் தேதியன்று, கரோனா தொற்று முற்றிலும் இல்லாத ஒன்பது நாடுகளில் ஒன்றானது நியூசிலாந்து. மேலும் நியூசிலாந்தில், மே 29 முதல் புதியதாக கரோனா பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை. கரோனாவை வீழ்த்திய இந்த சாதனையைக் கொண்டாட, நடனமாடி தனது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தியதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று குறித்து மக்களுக்குத் தெளிவான தகவல் அளித்தது, வருமுன் காக்கும் சுகாதார அமைப்பு, நாட்டில் பெரும் செல்வாக்கு பெற்ற பிரதமர் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவையே நியூசிலாந்து, கோவிட்-19 வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிவாகை சூட முக்கியக் காரணங்கள் என்று விளக்குகிறார் நியூசிலாந்துக்கான இந்தியத் தூதர் முக்தேஷ் பர்தேசி.
எவ்வாறு, நியூசிலாந்து அரசு தன்னுடைய நாட்டு மக்களுக்கு தக்க தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து, வைரஸ் தொற்று குறித்து தெளிவை எற்படுத்தி, கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என விளக்குகிறார் நமது இந்திய தூதர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்திலிருந்து தொலைப்பேசி வழியாக மூத்தப் பத்திரிக்கையாளர் ஸ்மிதா ஷர்மாவுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்நாட்டு அரசின் திட்டமிட்ட செயல்பாடுகள் வெற்றிக்கு வித்திட்டதைக் குறிப்பிடுகிறார்.
உள்நாட்டுப் போக்குவரத்திலிருந்த கட்டுப்பாடுகளும் பெரிய கூட்டங்களுக்கான தடையும் விலக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் சுணக்கமின்றி தொடர தேவையான அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாட்டின் எல்லையில் கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றன. இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் பிற அண்டை நாடுகளுடனான விமானப் போகுவரத்து விரைவில் தொடங்கவும் வாய்ப்புள்ளது. மேலும், சர்வதேச யோகா தினத்தை கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முந்தைய வழக்கமான முறையில் உற்சாகத்துடன் கொண்டாடவிருக்கும் ஒருசில நாடுகளில் ஒன்றாகவோ அல்லது ஒரே நாடாகவோ நியூசிலாந்து இருக்கும் என்கிறார் பர்தேசி.
கரோனா தாக்கத்தின் பின்புலத்தில் உத்வேகம் எடுத்துள்ள சீனாவின் ஆதிக்கம், நியூசிலாந்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஆழமான வர்த்தக உறவு ஆகியவை குறித்த கேள்விகளுக்கும், அவர் விளக்கமான பதிலளித்தார். அவரது பார்வையில், தனி ஒரு நாட்டை நியூசிலாந்து பெருமளவு நம்பி சார்ந்து இருப்பதில் உள்ள பாதகங்கள் குறித்து அந்நாட்டில் விமர்சனம் எழுந்துள்ளது. கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், சீனா மீதான பார்வையும் மாற்றத்துக்கு உள்ளாகும் வாய்ப்புண்டு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அவருடனான உரையாடல் பின்வருமாறு:
கேள்வி: மக்கள்தொகை மற்றும் பரப்பளவில், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் வேறுபாடுகள் ஏராளம். ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றை வென்ற நியூசிலாந்திடமிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது அல்லவா?
பதில்: இந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்தில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் பெற்ற பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன். கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவித்த நியூசிலாந்து, பிற உலக நாடுகளுக்கெல்லாம், ஒரு முன்மாதிரி நாடாக விளங்குகிறது. இந்த நோய்த்தொற்று இல்லாத பிற நாடுகள் வரிசையில், ஐரோப்பாவில் உள்ள குட்டி தேசமான மாண்ட்டெனிக்ரோ மற்றும் நியூசிலாந்து போன்ற ஒரு பசிபிக் கடல் நாடான சமோவா ஆகியவையும் இடம்பிடித்துள்ளன. நியூசிலாந்து மிகவும் முன்னேறிய, தொழில் துறையில் முன்னணியில் உள்ள நாடு என்பதாலும், மேற்கத்திய உலகுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், கரோனாவை வீழ்த்திய அதன் சாதனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மே மாதம் 29ஆம் தேதியிலிருந்து இங்கு புதியதாக தொற்று பாதிப்பு இல்லை. மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,504, உயிரிழப்பு எண்ணிக்கை 22 என்ற அளவில் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது, அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வரவேற்கத்தக்க வெற்றி. நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அடுத்த கட்டமாக கரோனாவை முழுமையாக ஒழிப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்.
பல்வேறு காரணிகள், நியூசிலாந்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இவற்றுள், முக்கியமானவை நாட்டின் பரப்பளவும் மக்கள் தொகை அடர்த்தியும் ஆகும். நாட்டின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியன் என்றாலும், நாடு முழுவதும் பரவலாக விரவியிருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த்தொற்று உள்ளோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது, இந்தியாவைப் போல் சிக்கலான ஒன்றாக இல்லாமல் மிக எளிதாக அமைந்தது. இந்தியாவில் நிலைமை வேறுபட்டுள்ளது.
கேள்வி: பிற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் மிகக் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நியூசிலாந்து கடைப்பிடித்த வழிமுறைகளின் அடிப்படையில், நடைமுறை சாத்தியமான சிலவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே...
பதில்: அவர்கள் நடைமுறைப்படுத்திய வழிமுறைகளில் மிக முக்கியமானது, கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஏற்படுத்திய 4 அடுக்கு மருத்துவ-சுகாதார எச்சரிக்கை ஒழுங்கமைவு. இதுமுதல் 4 வாரங்களிலேயே செயல்பாட்டுக்கு வந்தது. நோய்த் தொற்றில், 4ஆவது கட்டம், மிக உச்சம். மார்ச் மாதம் 20ஆம் தேதி வாக்கில், முதல் கட்டத்தை எட்டியதை அறிவித்தனர். ஆனால், அடுத்த மூன்று நான்கு நாள்களில் நியூசிலாந்தில் நோய்ப் பரவல் வரவிருப்பதைக் கணித்து, 4ஆவது கட்டத்துக்குச் செல்வதை தாமதமின்றி அறிவித்தனர்.
ஆரம்பத்தில், வெளிநாடுகளிலிருந்துவந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், ஈரான் மற்றும் சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவியது. இதனையடுத்து, இந்த நாடுகளுடனான எல்லைகள் மூடப்பட்டன. அத்துடன் நில்லாமல், 4ஆவது கட்ட சுகாதார எச்சரிக்கை ஒழுங்கு நடைமுறைப்படுத்தபட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் நோய்த் தொற்றின் தாக்கம் எப்படி இருக்கும் என்று மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
எந்த அளவு முன்னேற்பாட்டுடன் இருந்தனர் என்றால், முதற்கட்டம் குறித்த வழிமுறைகளை வெளியிட்டபோதே, 4ஆவது கட்ட நிலைமையின் தன்மைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. எனவே, உயர்மட்ட சுகாதார எச்சரிக்கை ஒழுங்கமைவுக்கு நியூசிலாந்தை, பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இட்டுச் சென்றார்.
மக்களும், கரோனா சவாலைச் சந்திக்கத் தயாரானார்கள். எனது பார்வையில், மக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் எவ்வாறு பெறுவது என்பதற்கு இந்த சுகாதார எச்சரிக்கை ஒழுங்கு குறித்த பரப்புரை ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. மேலும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு அதிக மக்கள் செல்வாக்கு உள்ளதை கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, மக்களும் அரசுக்கு முழு ஆதரவளித்து தங்கள் ஒத்துழைப்பை நல்கினர். அரசின் மீது மக்கள் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையைக் காண முடிந்தது. மக்களுக்கு இடையறாது தொடர்ந்த தெளிவான, குழப்பமற்ற தகவல் அளித்ததுடன், அரசு மேற்கொண்ட வருமுன் காக்கும் சுகாதார எச்சரிக்கை, கரோனாவுக்கு எதிரான போரில் நியூசிலாந்துக்கு பெரும் சாதகமாக அமைந்தது, என்பதே எனது கருத்து.
கேள்வி: கோவிட்-19 பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டதில், தென் கொரியா பின்பற்றத்தக்க முன்மாதிரி என்று உலக அளவில் பெயர் பெற்றது. ஆனால், வேறு சில நாடுகளைப் போலவே தென் கொரியாவும் கரோனாவின் இரண்டாம் கட்ட மீள் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில், நியூசிலாந்து எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
பதில்: இன்றைய நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், நியூசிலாந்து முழுமையாக சகஜ நிலைக்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், ஜூன் 9ஆம் தேதியில் இருந்து நாடு சுகாதார எச்சரிக்கை படிநிலையில்தான் இருக்கிறது. சமூக நிகழ்ச்சிகளும், ஒன்றிணைவுகளும், கூட்டங்களும் நடைபெறுகின்றன. பயணங்களுக்குத் தடையேதும் இல்லை. பொருளாதாரமும் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. 95 விழுக்காடு இயல்பு வாழ்க்கை மீண்டுள்ளது எனலாம். நாட்டின் எல்லைகள் இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன. இந்தத் தருணத்தில், அயல்நாட்டவர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வருவோர் எல்லாம், தாயகம் திரும்புபவர்கள்தான். அவர்களும், அரசு விதித்துள்ள 14 நாள்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொள்கின்றனர். கடந்த வாரம், இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இங்கு அழைத்துவரப்பட்ட அனைவருமே, அரசுசார் தனிமைப்படுத்தும் முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மூடப்பட்ட நாட்டின் எல்லைகள் அவ்வாறே தொடர்கின்றன.
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், புதிய நோய்த்தொற்று இல்லாத பட்சத்தில், ஆஸ்திரேலியா மற்றும் அருகிலுள்ள பசிபிக் கடல் தீவுகளுக்கும் விமானப் போகுவரத்தைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நாடுகளுடன், நியூசிலாந்துக்கு உள்ள நெருங்கிய உறவே இதற்கான காரணம். கரோனா தாக்கத்தின் தன்மையையொட்டியே இதற்கான முடிவும் அமையும். நாட்டின் எல்லைகளை திறப்பதும் நிலைமை சீராவதைப் பொறுத்ததே. அதனால்தான் நியூசிலாந்து அவசரம் காட்டவில்லை.
கேள்வி: இந்தியா–நியூசிலாந்து இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என நமது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் சமிக்ஞை அமைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் குறைவான எண்ணிக்கையில் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்படலாம் என்று தெரிவித்தாள்ளார். இரு நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்திற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: தற்போதைக்கு, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவருவதில்தான் நமது அரசின் கவனம் உள்ளது. அதுவே முதன்மையான பணியாகவும் இருக்கிறது. நியூசிலாந்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பக் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை இந்திய மண்ணில் சென்று சேர்க்கும் சேவையில் ’வந்தே பாரத் திட்டத்தின்’ கீழ் ஒன்பது ஏர் இந்தியா விமானங்கள் இந்த மாதம் முழுவதும் செயல்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், முதல் விமானம் சென்ற வாரம் தான், தனது சேவையைத் தொடங்கியது.
இந்தியர்களைத் தாய் மண்ணுக்குக் கொண்டுசெல்லும் இந்தப் பணி, வரும் ஜூன் 30ஆம் தேதி வரை செயல்படும். இங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களைக் கொண்டுசெல்லும் விமானங்கள், அங்கிருந்து புறப்படும்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கரோனா ஊரடங்கால் தங்கிவிட்ட நியூசிலாந்து குடிமக்களை அழைத்து வருகிறது. இது, இரு வழியிலும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது. அநேகமாக இந்த மாத இறுதிக்குள், இங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையோரை தாயகம் கொண்டு சேர்த்துவிடுவோம்.
கேள்வி: கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே என்ன விதமான ஒத்துழைப்பு நிலவுகிறது? ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்பட மருந்து பொருள்கள் இறக்குமதியில் உள்ள சூழல் என்ன? வெளியுறவு அமைச்சகத்திற்கு தாங்கள் அனுப்பியுள்ள தகவல் என்ன? கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கட்டுக்குள் கொண்டுவர நியூசிலாந்திடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
பதில்: கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குகின்றன. சில வாரங்களுக்கு முன்னர், நமது வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் நியூசிலாந்து துணை பிரதமருடன் தொலைப்பேசியில் உரையாடல் மேற்கொண்டார். நியூசிலாந்து துணை பிரதமர், பிப்ரவரி மாத இறுதியில் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இருவரும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரேம் கோவிட்-19 தாக்கியது. இருவரும், தொலைப்பேசி வாயிலாக தொடர்பில் இருந்தனர். மருந்து பொருள்களுக்கு, நியூசிலாந்து, இந்தியாவையே சார்ந்துள்ளது. இதுகுறித்து எம்மை நாடியபோது, நாங்கள் டெல்லியைத் தொடர்பு கொண்டோம்.
இப்போது, இந்திய மருந்து பொருள்கள் நியூசிலாந்துக்குத் தடையின்றி கிடைக்கிறது. இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகள் நமது வெளியுறவு விவகாரத் துறைச் செயலருடன் ஒரு மாதத்திற்கும் மேலாக நேரடி தொடர்பில் இருந்தன. நியூசிலாந்தும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தது. கரோனா பெருந்தொற்றை எவ்வாறு சமாளிப்பது, தடைபடாமல் மருந்து பொருள்கள் கிடைக்க வழிசெய்வது, உலகச் சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் எவ்விதம் தங்களுக்குள் ஒத்துழைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அந்தக் குழு விவாதித்தது. இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பில் உள்ளன. தற்போது, ஊரடங்கு, வான் வழி எல்லைகள் மூடல், விமானப் போக்குவரத்திற்கு உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் பயணிகளை ’வந்தே பாரத் திட்டத்தின்’ கீழ் அந்தந்த நாடுகளில் சேர்ப்பதில் இணைந்து செயல்படுகிறோம். நம்பகமான நேச நாடுகளாக, இந்தியாவும், நியூசிலாந்தும் பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட்டுவருகின்றன.
கேள்வி: இரு நாட்டு உறவில் முக்கியமான, சிறப்புமிக்க ஒரு இடத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பது கிரிக்கெட் என்றால் அது மிகையில்லை. மக்கள் கிரிக்கெட் மீது கொண்டிருக்கும் அதீத ஆர்வம் அணைவரும் அறிந்ததே. நியூசிலாந்து மக்களுக்கு கிரிக்கெட் இல்லாமல் போனது பெருங்குறையாக உள்ளதா? கரோனா அவ்வளவு விரைவில் ஒழியாது, இன்னும் சில காலம் நீடிக்கும் என்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு உறவுகள் எப்படி இருக்கும்? விரைவில் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதா?
பதில்: இரு நாட்டு மக்களுக்கும் கிரிக்கெட் முக்கியமான விளையாட்டு. இந்த ஜனவரி மாதம் தான், இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டது என்பது நினைவிருக்கலாம். ஜனவரி 9ஆம் தேதி முதல், மார்ச் 5ஆம் தேதி வரை, இந்திய அணி இங்குதான் சுற்றுப்பயணத்தில் இருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, நியூசிலாந்து தனது எல்லைகளை மூடிய காலகட்டத்தில்தான் இந்திய அணி இங்கிருந்து புறப்பட்டது. இங்கு, மக்களிடையே ரக்பி விளையாட்டிற்கு அமோக வரவேற்புள்ளது. விரைவில், உள்நாட்டுப் போட்டிகளை அவர்கள் தொடங்கவிருக்கிறார்கள்.
கேள்வி: நியூசிலாந்தில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் சூழலில், எவ்வாறு போட்டிகள் நடைபெறும்? இந்தியா தெரிவித்திருப்பது போல, ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறுமா?
பதில்: முன்னமே நான் தெரிவித்திருப்பது போல, கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு, அரசு கட்டுப்பாடுகளைப் பெருமளவு தளர்த்தியுள்ளது. கூட்டங்கள் கூடுவதற்கோ, சமூக நிகழ்ச்சிகளுக்குக்கோ, உள்நாட்டுப் பயணத்திற்கோ எந்த ஒரு தடையும் இல்லை. எதிர்வரும் ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தினத்தை, கடந்த ஆண்டுகளில் சிறப்பாக நிகழ்த்தியதைப் போல கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடவிருக்கும் ஒருசில நாடுகளில், நியூசிலாந்து முன்னணியில் இருக்கிறது. ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் கூட ஒன்றுகூடலாம், தடையேதும் இல்லை. தற்போதும், நியூசிலாந்தில் நீடிக்கும் ஒரே தடை, நாட்டின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்படுள்ளது மட்டுமே.
கேள்வி: கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து, விரிவான, சுதந்திரமான, காத்திரமான விசாரணை தேவை என்று ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. மேலும், சீனா இரு நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக உறவில் மிக மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா மிரட்டிவருகிறது. இந்தச் சூழலில், நியூசிலாந்து அரசு மற்றும் நாட்டின் மிகப்பெரும் தொழில் வணிக நிறுவனங்களின் பார்வையும் எதிர்வினையும் எவ்வாறு உள்ளது?
பதில்: சீனாவுடன் நெருங்கிய, ஆழமான உறவு நியூசிலாந்துக்கு உண்டு. இது இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வேர்கொண்ட உறவு. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற சுதந்திர வர்த்தக உடன்பாடும் நடைமுறையில் உள்ளது. நியூசிலாந்தின் வர்த்தகத்தில் மிகப் பெரும் பங்களிப்பு சீனாவுக்கு உண்டு என்பது இன்றைய நிலையின் யதார்த்தம். உலகையே சூறாவளி என உலுக்கி வரும் கரோனா பெருந்தொற்றின் பின்னணியில், நியூசிலாந்தின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது.
ஒரு நாட்டினையே அதிகப்படியாக சார்ந்திருப்பது எந்த அளவுக்கு உகந்தது, எதிர்காலத்திற்கு ஏற்றது என்ற கேள்விகள் தவிர்க்க இயலாத வண்ணம் எழுந்துள்ளன. மேலும், நியூசிலாந்தின் சந்தையைப் பரவலாக்காமல், விரிவுபடுத்தாமல் இருப்பது குறித்து பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இடையேயும், தொழில் வணிக கூட்டமைப்பினரிடமும் உரையாடல் நிகழ்கிறது. இந்தச் சூழலில், செய்தி ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களிலும் இது எதிரொலிக்கிறது. பல கட்டுரையாளர்கள், கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர், நியூசிலாந்து தனது சந்தையைப் பரவலாக்குவதுடன், தொழில் வர்த்தகத்துக்கான இறக்குமதியைப் பல நாடுகளிலுமிருந்து தருவிக்க நடவடிக்கைகளைத் தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிப்பதைக் காண முடிகிறது.
கேள்வி: சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தரமற்ற கரோனா பரிசோதனைக் கருவிகள் தொடர்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. நியூசிலாந்தும் பரிசோதனைக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை சீனாவிடம் இருந்தே பெற்றதா? அல்லது வேறு நாடுகளில் இருந்தும் தருவித்ததா?
பதில்: கரோனா பரிசோதனைக்குத் தேவையான கருவிகளையும், பாதுகாப்பு உடைகளையும், நியூசிலாந்து வெளிநாடுகளில் இருந்து தருவித்ததுடன், உள்நாட்டிலும் தயாரித்தது. தரமற்ற பரிசோதனைக் கருவிகள் என்ற சர்ச்சை இங்கு பெரிய அளவில் பிரச்சனையாக எழவில்லை.
இதையும் படிங்க: 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'