புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் கலாம் சமூக சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது சமூக சேவை மையம் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்துவிட்டு, எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்ட முயன்றனர். இதனால் இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சமுக சேவை மையம் ஆதரவாளர்கள் பாஸ்கரின் ஆதரவாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சேவை மையத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் மீண்டும் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சமூக சேவை மையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் கலைந்து செல்ல வைத்தனர்.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தையை உடனே திறக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் கடிதம்