நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், மத்திய அரசு கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவிட்-19 கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்தன.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய உள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “கோவிட்-19 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதாக வெளிவரும் அறிவிப்புகள் போலியானவை. மேலும், இதுபோன்ற எந்தவொரு குழுவையும் மத்திய உள்துறை அமைச்சகம் அமைக்கவில்லை. போலி செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
முன்னதாக, சமூக வலைதளங்களில், 2020 மே 18 திங்கள் தேதியிட்ட, உள் துறை அமைச்சரின், அதிகாரப்பூர்வ உத்தரவுகளுக்கு இணங்க, கோவிட்-19 சிறப்பு நிலை ஆலோசனைக் குழுவின் ஒப்புதலின் பேரில், 25 உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்த அறிக்கை வேகமாகப் பரவிவந்தது.
அதில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு குறித்து மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்ய ஒரு மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 25 உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 114 பேர் புதிதாக கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.