அஸ்ஸாம் மாநிலத்தில் 597 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தத் தேர்வு பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது.
இது குறித்து அஸ்ஸாம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில் முன்னாள் டிஐஜி பி.கே. தத்தா, பாஜக நிர்வாகி தீபன் தேகா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவர் உள்பட 58 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 13இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 36 பேர் மீது சிஐடி 2,621 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்தது. கூடுதலாகத் தாக்கல்செய்யப்பட்ட 1,217 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 183 சாட்சியங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, 32 சாட்சியங்கள், 5 குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.