பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற விவிஐபிகள் பயணம் செய்வதற்காக அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
மூன்று ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள, இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரும், அப்ரூவராக மாறியவருமான தொழிலதிபர் ராஜிவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், சக்சேனா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும்; ஆதலால் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இந்த மனுவைக் காணொலி காட்சி மூலம் இன்று விசாரித்த நீதிபதி சி. ஹரி சங்கர், அம்மனு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என ராஜிவ் சக்சேனாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அமலாக்கத்துறை முன்னர் தாக்கல் செய்திருந்த இதேபோன்ற மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 5ஆம் தேதி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம்! - ஐநா கவலை